‘எழுக தமிழ்’ பேரணியில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

எந்த வித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னுரிமைப்படுத்தி நடாத்தப்படும் இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் – யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பேரணியானது யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தை சென்றடையவுள்ளது.

பேரணியில் மக்கள் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் துவிச்சக்கர வண்டிகள், மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வருவோர் பேரணியில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ் பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உணவுச் சாலைகள், மருந்தகங்கள், எரிபொருள் நிலையங்கள், வாகன திருத்துமிடங்கள் ஆகியன தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், சந்தைகள், மற்றும் நிறுவனங்களை மூடி பேரணியின் வெற்றிக்கு ஒத்துழைக்குமாறு தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ் மக்களின் பேராதரவுடன் நடைபெற இருக்கும் பேரணியை குழப்பும் நோக்குடன் சிலர் விசமத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக தெரிவித்த தமிழ் மக்கள் பேரவை, கூட்டுப் பேரணி என்ற வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி எனற பெயர் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண நகரப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சுவரொட்டிகளை யார் வெளியிட்டார்கள் என்பது தெரியாது எனவும் இதற்கும் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் பேரணிக்கும் எதுவித தொடர்பும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழ் மக்களின் நலன் சார்ந்து பேரவையால் முன்மொழியப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அதனை ஆதரிப்பவர்கள் பேரணியில் கலந்து கொள்ள முடியும் எனவும் குறித்த பேரணி அரசியல் கட்சி சார்பற்றது எனவும் தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமையை அகிம்சை வழியில் வலியுறுத்தும் இப்பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணி திரண்டு பங்கேற்குமாறும் தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

எழுக தமிழ் தொடர்பான மேலதிக செய்திகளுக்கு..

Related Posts