எமது மக்களின் விடிவுக்காக எவ்வளவு தூரமும் பயணிப்போம்! வடமாகாண முதலமைச்சர்.

vicknewaran-tnaஎங்கள் தன்மானத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் எமது மக்களின் விடிவுக்காகவும்,
விமோசனத்துக்காகவும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அந்தவகையில் அரசாங்கத்துடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கவும் நாம் தயாராகவே உள்ளோம் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார் .

இராணுவத்தினர் வடமாகாணத்தை விட்டு வெளியேறுவார்களேயானால், பாதுகாப்பு, காணி, தொழில் வாய்ப்புப் பிரச்சினைகள் உட்பட மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்ட பிரச்சினைகள் தீரும் என்றும் அவர் சொன்னார் .

அரசாங்கத்துடன் இணங்காமல் எந்தவொரு மாகாண சபையினாலும் செயற்பட முடியாத நிலைமையே இன்று காணப்படுகின்றது என்று கூறிய அவர், ஜனாதிபதிக்கும், ஆளுநருக்கும் கணிசமான அளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

விக்னேஸ்வரனுடனான பேட்டி வருமாறு !

கேள்வி – வடமாகாண சபையின் செயற்பாடுகள் பூரணமில்லாதிருப்பதற்கு வேறு என்ன முட்டுக்கட்டைகள் உள்ளன என்று கருதுகிறீர்கள்?

பதில் – எமது மாகாண சபையின் பிரதம செயலாளர் எமது செயற்பாட்டுக்கு எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. அவர் தான் ஜனாதிபதி, ஆளுநருக்கு கீழேயே இருப்பதாகவும், மாகாண சபை தனக்கு ஆணை பிறப்பிக்க முடியாது என்றும் கூறுகிறார் . அனைத்து விடயங்களிலும் ஆளுநரின் அறிவுரைகளையே செவிமடுக்கின்றார். ஆனால் சட்டரீதியாக இது தவறு. சட்டப்படி பிரதம செயலாளர் ஜனாதிபதி, முதலமைச்சரின் அனுசரணையுடனேயே நியமிக்கப்பட வேண்டும். எம்முடன் ஒத்துழைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இவரைப் பொறுத்தமட்டில் அரசின் பிரதிநிதியாகவே செயற்பட்டவர். எனவே எம்முடன் இணைந்து செயற்பட முடியாது.

உண்மையில் தேர்தலில் அரசு தோல்வியடைந்த கையோடு அவர் பதவியை இராஜினாமா செய்திருக்க வேண்டும். எனினும் அது நடக்கவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியுள்ளோம். எனவே விரைவில் நல்ல முடிவு வரும்.

கேள்வி – அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கட்டிடங்களை உடைக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறதா? அல்லது நிறுத்தப்பட்டு விட்டதா?

பதில் – கட்டிடங்கள் உடைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவே நாம் அறிகின்றோம். ஜனாதிபதியின் பணிப்புரையை அடுத்து ஒருநாள் நிறுத்தப்பட்டது. எனினும் தொடர்ந்தும் இடம்பெறுவதாக மக்கள் கூறுகின்றனர். இதனைப் பார்வையிட நான் எத்தனித்த போது அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கேட்டேன். அதற்கு எவரும் பாதுகாப்பு வலயத்துக்குள் செல்ல முடியாதென அறிவிக்கப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது .

கேள்வி – வடமாகாண சபையின் சீரான செயற்பாட்டுக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அந்தவகையில் ஆளுநர் விவகாரம் எந்தவகையில் உள்ளது? அவரை மாற்ற அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா?

பதில் – ஆளுநர் மாற்றப்பட்டு சிவில் அதிகாரி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அது மாத்திரமன்றி வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகவிருக்கும் செயற்பாடுகளை தனது செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வருமாறும் கூறினார். பலவிதமான நெருக்கடிகள் குறிதம்துப் பேசியுள்ளேன். தீர்த்து வைப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் உறுதியளித்துள்ளார். கேட்பதெல்லாம் கொடுக்கப்படும் என்பதைப்போன்று உறுதியளிக்கப்பட்டது. ஆரோக்கியமான பேச்சுவார்த்தையாகவும் அமைந்தது. எனினும் ஒருவார காலமாகியும் எதனையும் நடைமுறையில் காணவில்லை. நல்லது நடக்கும் என நம்புவோம்.

கேள்வி – ஜனாதிபதி, ஆளுநரின் ஒத்துழைப்பின்றி வடமாகாண சபையை இயக்க முடியாதென்று கூறுகின்றீர்கள். அப்படியானால் இப்படி ஓர் அதிகாரமில்லாத சபையை ஏன் பொறுப்போற்றீர்கள்?

பதில் – இது ஒரு நியாயமான கேள்வி. அதற்குக் காரணம் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளன என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவே நாம் இவ்வாறு செய்தோம். அரசு இதுவரை வீதிகளை அமைத்து விட்டு மக்கள் எம்மோடு என்றார்கள். ஆனால் மக்களோ தெருக்கள் தேவையில்லை. வாழ்வாதாரம், பாதுகாப்பு, நிம்மதியான வாழ்ககையே எமது எதிர்பார்ப்பு என்று தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளார்கள் இதனை அரசாங்கம் புரிந்துகொள்ள முன்வரவேண்டும். இதனை உணர்ந்து கொள்ளாத வகையில் இப்போது முட்டுக்கட்டை போடுகிறார்கள். எவ்வாறெனினும் மக்களின் விருப்பம் என்ன? அவர்களின் எதிர்பார்பு என்ன? என்பதை இன்று சர்வதேசம் நன்கு அறிந்து வைத்துள்ளது.

Related Posts