தென்னிலங்கை மீனவர்கள் இழுவைப்படகினை பயன்படுத்துவதுடன் தடை செய்யப்பட்ட உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர். அதற்கும் மேலான கொக்குளாய் நாயாறு கடல் பகுதிகளில் இராணுவத்தின் உதவியுடன் மீன்பிடிக்கின்றனர். இதனைக் கேட்க திராணியில்லாத நீரியல் வளத்துறையினர் எமது தொழிலாளர்களை மட்டும் ஏன் தடுத்து வருகின்றனர் என்று வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழில் சங்கத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தடைசெய்யப்பட்டுள்ள இழுவைப்படகு மீன்பிடியினை மீண்டும் அனுமதிக்கக் கோரி இன்று உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர்களின் உணவு விடுப்பு போராட்டத்திற்கு நான் எனது ஆதரவு தெரிக்கின்றேன். யாழ்ப்பாண குடநாட்டில் சுமார் 200 இழுவைப்படகுகள் தொழிலில் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 25 இழுவைப்படகுகள் வல்வெட்டித்துறை கிழக்குப் பகுதியில் உள்ளன.
1974ஆம் ஆண்டு நோர்வே அரசின் உதவியுடன் சீனோர் திட்டத்தின் ஊடாகவே இந்த இழுவைப்படகுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் 2010 ஆம் ஆண்டு இலங்கை அரசின் வர்த்தமானி அறிவித்தலின் படி அடிமடி அல்லது இடைமடி இயந்திர ரீதியான இழுவைப்படகுகள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் இப்பகுதி கடற்றொழிலாளர்கள் செய்வது இந்திய மீனவர்கள் போல் இயந்திரங்களைப் பயன்படுத்துவது இல்லை. இவர்கள் மனித வலுவைப் பயன்படுத்தி கைகளாலேயே இழுவை செய்கின்றனர்.
தடை செய்யப்படாத ஒரு தொழிலை தடை செய்யப்பட்டதாக கூறி மறிப்பது என்பது அவர்களது குடும்பங்களை பட்டினி போடுகின்ற வஞ்சகச் செயல் என்று தான் நான் கருதுகின்றேன்.
மத்திய அரசோ, கடற்றொழில் அமைச்சோ அல்லது மாகாண சபையோ கடற்றொழிலாளர்களது நிலமையினைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளாது அனைவரும் தடை செய்யப்பட்ட தொழில் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை.
அத்துடன் சிறு தொழிலாளர்களான இவர்கள் இரவு நேரங்களில் மீன்பிடிக்க செல்வதில்லை பகல் வேளையிலேயே மீன்பிடிக்க செல்கின்றனர். இவ்வாறு இழுவைப்படகினால் ஆழ்கடல் வளம் பாதிக்கும் என கூறுகின்றனர்.
எனவே ஆழ் கடலில் பாதிப்பு இருக்கும் என்றால் மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஊடாக ஆழ்கடல் பாதிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளட்டும்.
அதற்குப் பின்னர் ஆழ்கடல் பாதிக்கின்றதா இல்லையா என்ற முடிவினை எடுக்க முடியும். அதைவிடுத்து ஆழ்கடல் பாதிக்கின்றது என்று கூறிக் கொண்டு அப்பாவிகளின் வாழ்க்கையினையே அழித்து வருகின்றனர்.
அத்துடன் இந்தியாவில் 45 நாள்கள் மீன்குஞ்சுகள் பொரிப்பதற்கு என தொழிலை மேற்கொள்ளாது இருக்கின்றனர். ஏன் அவ்வாறான முறை இங்கு இல்லை. மேலும் தென்னிலங்கை மீனவர்கள் இழுவைப்படகினை பயன்படுத்துவதுடன் தடை செய்யப்பட்ட உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர்.
அதற்கும் மேலான கொக்குளாய் நாயாறு ஆகிய தமிழ் மக்களது கடல் பகுதிகளில் தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். இங்கேயே வந்து வாடிகள் அமைத்து தொழில் செய்கின்றனர்.
இவ்வாறு 400 குடும்பங்கள் இங்கேயே தங்கி இராணுவத்தினருடைய உதவியுடன் தொழிலை மேற்கொள்கின்றனர். இதனைக் கேட்க நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு திராணி இல்லை. ஆனால் எமது தொழிலாளர்களை மட்டும் தடை செய்து வருவது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.