ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுதந்திர ஊடகக்குரல் கண்டனம்

voice-of-free-mediaவலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் உ.சாலின் மீது இனந்தெரிய நபர்கள் மேற்கொண்ட தாக்குதலை சுதந்திர ஊடகக்குரல் கண்டித்துள்ளது.

இவர் மீதான தாக்குதலுடன் யாழ். மாவட்டத்தில் ஊடகங்கள் மீது இந்த வருடத்தில் இடம்பெற்ற மூன்றாவது தாக்குதலாகும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாதது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ். குடாநாட்டில் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதலின் ஆகப்பிந்திய தாக்குதலாக சாலின் மீதான தாக்குதல் அமைந்துள்ளது.

யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது இந்த வருட ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
குரல் கொடுக்கும் சிவில் சமூகங்களையும் ஒடுக்கியுள்ள நிலையில் மக்களின் குரலாக இன்னமும் ஒலித்துக் கொண்டிக்கும் ஊடகங்களையும் மௌனிக்க செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி உதயன் பத்திரிகையின் விநியோக ஊழியர் தாக்கப்பட்டதுடன் அவர் கொண்டு சென்ற பத்திரிகைப் பிரதிகளும் மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையின் விநியோக ஊழியர் தாக்கப்பட்டதுடன் அவர் கொண்டு சென்ற பத்திரிகைப் பிரதிகளும், மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக வலம்புரிச் செய்தியாளர் மீது நேற்றைய தினம் இனந்தெரியாதவர்களின் கைவரிசை மீண்டும் காட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக யாழ். ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலுக்கு எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு இலங்கை அரசும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுபவர்களும் உடந்தையாக இருக்கின்றனரா என்ற சந்தேகமும் தோன்றியுள்ளது.

எழுந்துள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் செயற்படாது தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை இனியாவது கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் சுதந்திர ஊடகக்குரல் கேட்டுக் கொள்கின்றது என்றும் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

வலம்புரி செய்தியாளா் மீது 6 போ் கொண்ட குழு தாக்குதல்

Related Posts