உலக சுகாதார நிறுவனத்தால் யாழ் பொது நூலகத்திற்கு மருத்துவம் தொடர்பான புத்தகங்கள், கணினி என்பன நேற்று முன்தினம் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் வேறடோசி ருஸ்ரோம் மேத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
யாழ் பொது நூலகம் வட மாகாணத்தின் அறிவுத்தகவல் களஞ்சியமாக இருப்பதுடன் தினம் தோறும் வட மாகாண மக்களின் அறிவுத்தேடலுக்கான களமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
200 மேற்பட்ட மருத்துவம் தொடர்பான புத்தகங்களும் மற்றும் கணினி உபகரணங்களும் யாழ் மாணவர்களுக்காக உலக சுகாதார நிறுவனத்தால் வழங்கப்பட்டது. அத்துடன் ஆளுநர் அவர்களால் மருத்துவ புத்தகங்கள் கொண்ட புத்தக அலுமாரி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் நகர மேஜர் யோகேஸ்வரி பற்குணராஜா, வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், உலக சுகாதார நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளையைச் சேர்ந்த டாக்டர் சிவராஜா, யாழ் மாநகர சபை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.