பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான யாழ்தேவி புகையிரத சேவை 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எனினும், இந்த யாழ்தேவியுடன் இணைந்த சேவையாக 60களில் இணைத்து கொள்ளப்பட்ட உத்தர தேவி, மறக்கப்பட்டுவிட்டதா இன்றேல் யாழ்தேவிக்கு இணைந்ததாக உத்தர தேவியும் சேவையில் இணைத்துகொள்ளப்படுமா என்று கேள்வி எழும்பியுள்ளது.
இது தொடர்பில் அறிவதற்காக ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு முயன்ற போதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.
யாழ்தேவி புகையிரத சேவையை யாழ்ப்பாணம் வரையிலும் ஈடுபடுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளமையினால் உத்தரதேவி தொடர்பிலான தகவல்களை தம்மால் வழங்கமுடியாதுள்ளது என்று ரயில்வே பொது முகாமையாளர் காரியாலய சேவையாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்தேவி (யாழ் தேவி எஸ்பிரஸ்) என்ற சேவை, 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. யாழ்தேவி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் புகையிரத சேவையாகும்.இச்சேவை இராகமை, பொல்கஹவெல, மாஹோ, அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது.
காலை 5.45 இற்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் யாழ்தேவி, மதியம் 1.15இற்கு கொழும்பை வந்தடைந்தது. இதேபோல காலை 5.45இற்கு கொழும்பில் இருந்து புறப்படும் யாழ்தேவி மதியம் 1.15 இற்கு காங்கேசன்துறையை சென்றடைந்தது.
யாழ்தேவி புகையிரதத்துக்கு வட பகுதியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இலங்கை புகையிரத திணைக்களத்தால் வட பகுதி போக்குவரத்து சேவைக்காக உத்தர தேவி என்னும் புகையிரதம் 1960 ஆம் ஆண்டளவில் மேலதிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
மதியம் 1.15இற்கு கொழும்பில் இருந்து புறப்படும் உத்தர தேவி, இரவு 8.30இற்கு காங்கேசன்துறையை சென்றடைந்தது. அதுபோல காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15 இற்கு புறப்படும் உத்தர தேவி, இரவு 8.30 இற்கு கொழும்பை வந்தடைந்தது.
இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு கிடைத்த ஆண்டு வருமானத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதமான வருமானம், யாழ்தேவி மற்றும் உத்தர தேவி ஆகியவற்றின் இணைந்த சேவை மூலம் கிடைத்த என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டணியின் வெற்றியின் காரணமாக பதுளை உடரட்ட மெனிக்கேயின் இணைந்த சேவையாக பொடி மெனிக்கேயும், காலி சமுத்திர தேவி இணைந்த சேவையாக காலுகுமாரியும் 1960 ஆம் ஆண்டளவிலேயே ஆரம்பிக்கப்பட்டது என்று இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டறை தகவல்கள் தெரிவிகின்றன.