இழுவைப்படகு பயன்பாட்டினை (ரோடலர்) நிறுத்திவிட்டு மாற்றுத் தொழில் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை மீனவ சமூகம் ஏற்க மறுத்துவிட்டது.
யாழ். குருநகர் பகுதி மீனவர்களிடமே இழுவைப்படகினை (ரோடலர்) நிறுத்திவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை தலைமைக் காரியாலய உதவிப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கும் குருநகர் மீனவர் சங்கத்தினருக்கும் இடையில் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை காலை சந்திப்பு இடம்பெற்றது.
அச்சந்திப்பின் போது, இழுவைப் படகினை நிறுத்திவிட்டு மாற்றுத் தொழில் செய்வதற்கான வலை மற்றும் இதர உபகரணங்கள் தருவதாக உறுதியளித்ததுடன், அதற்கு சம்மதித்தால், விண்ணப்பபடிவத்தினை பூரணப்படுததி தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கையினை ஏற்கமறுத்த குருநகர் மீனவ சங்கத்தினர் அதிகாரிகளுடன் முரண்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் குருநகர் மீனவர்களுடன் கலந்துரையாடி பதிலளிப்பதாக அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துவிட்டு கடற்றொழில் திணைக்களத்தினை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.