இலங்கை – இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ள நிலையில், வடமாகாண மீனவர்கள் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அழைப்பு இன்னமும் இலங்கை மத்திய அரசாங்கத்தினால் விடுக்கப்படவில்லையென வடமாகாண மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்தார்.
இந்திய – தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வது என வடமாகாண சபையினால் தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதனை முந்திச் செயற்படும் விதமாக இலங்கை மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது’ என்றும் டெனீஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசு எந்தளவிற்கு நடவடிக்கை எடுக்கின்றது என்பது தொடர்பில் வடமாகாண சபை பொறுமையாகப் பார்த்து வருகின்றது.
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் சரியான முடிவு எடுக்காத பட்சத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நானும் இணைந்து இந்திய தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.