இலங்கையில் 35 வீதமான இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன; யாழ்.பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு

இலங்கையில் 35 வீதமான இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. குறிப்பாக இருதய நோய், நீரிழிவு நோய் என்பவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றுக்கு தற்கால வாழ்க்கை முறை, சுகாதாரமான ஆரோக்கியமான உணவுப் பழக்க முறைகள் இல்லாமை என்பன சாதகமாக அமைந்துவிடுகின்றன.

இவ்வாறு கூறினார் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன்.
வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் நடத்திய தேசிய சுகாதார வாரத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரை நிகழ்த்தும் போது:

சுகாதாரத் திணைக்களத்தால் கடந்த வருடங்களில் டெங்குக் கட்டுப்பாட்டு வாரம், நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் என மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்பட்டன.

இலங்கையின் 65 வருடகால சுகாதார சேவைகள் வரலாற்றில் மூன்று முக்கிய செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இவற்றில் தொற்றுநோய்களின் கட்டுப்பாடு (மலேரியா), தடுப்பூசிகள் மூலம் தடுக்கக்கூடிய நோய்கள், தாய் சேய் நல மேம்பாடு போன்றவற்றுக்கான செயற் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தக் காலப் பகுதிகளில் தாய், சேய் மரணம் மிக அதிகமாகக் காணப்பட்டதால் சுகாதார சேவைகள் நடவடிக்கைகள் மூலம் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

தெற்காசிய நாடுகளிலேயே மிகச் சிறந்த சுகாதார குறிகாட்டி நாடாக இலங்கையை எடுத்துக்கொள்ளலாம். தற்போது புதிய தொற்று நோய்கள், டெங்கு நோய் பரவலாக்கம் என்பவை சுகாதாரத் துறைக்கு ஒரு சவாலான விடயமாக உள்ளது.

இவற்றைவிட தொற்றா நோய்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு 65 வீதமான இறப்பு தொற்றாநோய்களால் ஏற்பட்டன. தற்போது 35 வீதமான இறப்புகள் நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன.

அபிவிருத்தி அடைந்த நாடுகளின் நோய் பரம்பலுக்கு ஏற்ற நிலையை இலங்கையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இரண்டு முதல் 4 மடங்கு அதி கரித்தும் வருகின்றன. இலங்கையில் வருடாந்தம் இருதய நோய், நீரிழிவு நோய் என்பவற்றால் 330 பேர் இறக்கின்றனர். இதில் மூன்றில் ஒரு பங்கினர் நோய் இருப்பதை அறியாதவர்களாக இருந்துள்ளனர்.

எனவே, தொற்றாநோய்கள் தற்போது பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளதால் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாப்போம்.என்றார்.
Home Share on email Share on print
Google0 0

Related Posts