இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த மாநாடு வவுனியாவில்!

mavai mp inஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது வருடாந்த மாநாடு வவுனியாவில் நடைபெறவிருக்கின்றது.

எதிர்வரும் ஜுன் மாத இறுதியில் அல்லது ஜுலை முற்பகுதியில் இந்த வருடாந்த மாநாட்டை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இம்முறை இந்த வருடாந்த மாநாடு வவுனியாவில் நடைபெறவுள்ளதால் அங்கு மாநாட்டுக்கான வரவேற்புக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு இந்த வாரம் கூடி மாநாட்டை நடத்துவதற்கான திகதி உட்பட மாநாடு தொடர்பான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும், தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மாநாட்டுக்கு முன்னோடியாக கட்சிக் கிளைகளைப் புனரமைத்தல், மாவட்ட, பிரதேச மட்டக் கட்சிக் கட்டமைப்புக்களைப் பலப்படுத்தல் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள கூடுதலான இளைஞர்களை கிளைகளில் உறுப்பினர்களாகச் சேர்த்து உள்வாங்குதல் போன்ற நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இம்முறை மாநாட்டில் முஸ்லிம்களும் பங்குபற்றுவதற்கு ஆர்வம் காட்டி வருவதால், அவர்களையும் உள்வாங்கி வரவழைக்கவும், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல் தலைமைகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் தமிழரசுக் கட்சி ஆவன செய்யவுள்ளது எனவும் அறிய வருகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14 ஆவது வருடாந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts