இலங்கைக்கெதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது! இந்தியா ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது. அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் பிரேரணைக்கு ஆதரவாக ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் வாக்களித்ததுடன் தாய்லாந்து, பாகிஸ்தான், வெனிசுலா, இந்தோனேசியா , சவுதி அரேபியா ,குவைத் ,ஈக்வடோர், கட்டார், மாலைதீவுகள் கொங்கோ ,உகண்டா, மயுட்டானியா ,மோல்டோவா உள்ளிட்ட 13 நாடுகள் எதிராக வாக்களித்தன. அத்துடன், ஜப்பான் மலேசியா கசகஸதான் அங்கோலா கென்யா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

அமெரிக்காவின் இந்த தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை முன்வைத்த நிலையில், வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. அத்துடன் அந்த வாக்களிப்பில் எட்டு நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையுடனான உறவை துண்டிக்க முடியாது என இந்தியப் பிரதிநிதி கருத்து தெரிவித்துள்ளார்.13வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை அமுல் படுத்த வேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தினார்.அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா., மனித உரிமை ஆணையர் இலங்கையை பார்வையிட வேண்டும். 13வது அரசியல் சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். வடக்கு மாகாண மக்கள் தேர்தலை சந்திக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர் முடிந்திருப்பதை இலங்கையில் சமஉரிமை வழங்கும் தருணமாக பார்க்கிறோம் என தெரிவித்ததுடன், உலக நாடுகள் ஏற்கும் வகையில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கைப் பிரதிநிதி மகிந்த சமரசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகள் கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.அமெரிக்கத் தீர்மானத்தில் உள்ள புகார்கள் தவறானவை என்றும் இன்று இங்கு இலங்கைக்கு நேர்ந்தது இன்னுமொருநாள் இங்குள்ள இன்னொரு நாட்டுக்கு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இறுதிக் கட்டப்போரின் போது நடந்திருக்கக்கூடிய போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா இந்தத் தீர்மானத்தில் கோரியது.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடக்கின்றன.எனினும் அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பெரும் விசனங்கள் வலுத்துவருகின்றன.

போருக்குப் பின்னரும் நாட்டில் மனித உரிமை மீறல்களும் கடத்தல்களும் ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்களும் அதிகரித்துவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை கடுமையாக மறுத்துவருகிறது.

Related Posts