‘யாழ். மாவட்டம் கல்வி, பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில், அபிவிருத்தி போன்றவற்றில் சிறந்த மாவட்டமாக முன்னொரு காலத்தில் விளங்கியது’ என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பீரிஸ், யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் மாநாட்டு மண்டபத்தில் சிவில் சமூகம் சார்ந்த பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
‘இலங்கையில் யாழ். மாவட்டம் பல்வேறு அபிவிருத்திகளில் முன்னிலையில் இருந்தது. கடந்த 30 வருட யுத்த காலத்தின் பின்னர் சிறிய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் தற்போது வடபகுதி பல்வேறு அபிவிருத்திகளை கண்டு வருகின்றது. இதன்போது, சில குறைபாடுகள் இருக்க தான் செய்யும். அவற்றை சீர் செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
பிரச்சினைகள் இருக்கலாம் அவற்றை தாங்கி வாழ வேண்டும். தற்போதைய அபிவிருத்திகள் இணக்கத்தின் மத்தியில் முன்னேற்றத்தை கண்டு வருகின்ற போது, சில பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
இங்கு எடுத்துரைக்கப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் கலந்தாலோசனைகள் மேற்கொள்கின்றேன். அதன் பின்னர் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்’ என்றார்.
இதேவேளை, மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கொழும்புத்துறை, மகேந்திரபுரம் கிராமத்திற்கு சென்ற அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ், அங்குள்ள மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று காலை 10.30 மணிக்கு அங்கு சென்ற அமைச்சர் அங்குள்ள நிலமைகளை ஆராந்துள்துடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தையும் பார்வையிட்டுள்ளதுடன் இக்கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு எந்த தெந்த நாடுகள் உதவிகள் வழங்கியுள்ளன என்றும் கேட்டறிந்தார்.
இதந்த விஜயத்தின் போது யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரம், யாழ் மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பை தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்ற அமைச்சர் அங்குள்ள ஆய்வு கூடத்தினையும் பார்வையிட்டார்.