இரசாயன பகுப்பாய்வுக்கான திகதி அறிவிக்கவில்லை: சரவணபவன் எம்.பி.

saravanabavan_CIதாக்குதலுக்கு உள்ளான உதயன் பத்திரிகை அச்சிடும் பகுதியை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை என உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது எரியூட்டப்பட்ட இயந்திரப் பகுதியை மோப்ப நாயின் உதவியுடன் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இருப்பினும் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்கள் வரும்வரைக்கும் இயந்திரப்பகுதியை சீல் வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு திங்கட்கிழமை காலை விஜயம் மேற்கொண்டு எரியூட்டப்பட்ட இயந்திரப்பகுதியை பார்வையிட்டதுடன், உதயன் பத்திரிகை நிறுவனத்தின் பாதுகாப்பிற்கென பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரையும் நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், கடந்த இரு தினங்களும் விடுமுறை தினங்கள் ஆகையினால், இராசாயான பகுப்பாய்வாளர்கள் பகுப்பாய்வு மேற்கொள்வதற்கான திகதி அறிவிக்கவில்லை என்றும் எப்போது இரசாயன பகுப்பாய்வு நடைபெறும் என்பது பற்றியும் தெரியாதென்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts