இன்புளுவென்ஸா வைரஸ் தாக்கம் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்

InfluenzaPoster_Engநாட்டின் சில பிரதேசங்களில் இன்புளு வென்ஸா (ஏஎச்1என்1) வைரஸ் நோய் தலைதூக்கியுள்ளதால் மிகவும் விழிப்பாக இருக்குமாறு சுகாதார அமைச்சு நாட்டு மக்களிடம் நேற்று வேண்டுகோள் விடுத்தது.

குறிப்பாக கர்ப்பிணிகள், சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்றோர் இந்நோய் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவ்வமைச்சு கேட்டுள்ளது.

இன்புளுவென்ஸா ஏ (எச்1 என்1) வைரஸ் நோய் சுவாசத் தொகுதி மூலம் துரிதமாகப் பரவக் கூடியதாக விளங்குவதால் நாட்டு மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வது அவசியம் எனவும் அவ்வமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிடுகையில், காய்ச்சல், இருமல், மூக்கினூடாக சளி வடிதல், தலைவலி, உடல்வலி போன்ற வாறான அறிகுறிகள் எவருக்காவது தென்படுமாயின் அது இன்புளுவென்ஸா ஏ (எச்1 என்1) வைரஸ் நோயாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் தாமதியாது மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம். தவறும் பட்சத்தில் மூச்செடுப்பதில் சிரமம் மற்றும் நியூமோனியா போன்ற பாதிப்புகளும் வெளிப்படும்.

அதனால் இந்நோய்க்குரிய குணாம்சங்கள் தென்படுமாயின் கர்ப்பிணிகள் தாமதியாது மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில், கர்ப்பிணி கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி வீழ்ச்சி அடைந்து காணப்படும். அதனால் இந்நோயின் பாதிப்பு இவர்களுக்கு தீவிரமாகக் காணப்படும். உரிய சிகிச்சை யைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இந் நோயின் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

அதேநேரம், பாடசாலைப் பிள்ளைகள் எவராவது இந்நோயிற்குரிய அறிகுறி தென்படுமாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்பாது வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம். அத்தோடு அலுவலகங்களில் கடமைபுரிகின்ற எவருக்காவது இந்நோயிற்குரிய அறிகுறிகள் காணப்படுமாயின் அலுவலகத்திற்கு செல்லாது வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுக் குணமடைந்து கொள்ள வேண்டும். இவ்வாறான நடவடிக்கையின் மூலம் இந்நோயின் பரவுதலைத் துரிதமாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவ்வதிகாரி கூறினார்.

Related Posts