இந்து- கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையே முரண்பாடு!

யாழ். குப்பிளான் பகுதியில் இந்து – கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையில் தேவாலயம் ஒன்று அமைவது தொடர்பாக கடுமையான முரண்பாடு நிலவிவரும் நிலையில், இந்து மதம் சார்ந்த மக்கள் நேற்று காலை அப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் திடீரென கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்றினை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விரைவாக அந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

இந்நிலையில் குறித்த தேவாலயத்தை திறப்பதற்கு இந்து மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக சிறிது காலம் திறக்கப்படாமலிருந்த தேவாலயம் நேற்று திறப்பதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து, தேவாலயத்திற்கு முன்னால் வந்த இந்து மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவ மக்களே இல்லாத இடத்தில் தேவாலயம் தேவையில்லை எனவும், அதற்கான சட்டரீதியான அனுமதிகள் பெறப்படவில்லை எனவும் கூச்சலிட்டனர்.

தொடர்ந்து அந்தப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தினர். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் மக்களை துரத்தி நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related Posts