இந்திய மக்களின் வரிப்பணத்தின் மூலம் இந்தியாவினால் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் தமிழ் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்’ என்று சிறு கைத்தொழில் மற்றும் தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், இந்திய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்திய ஊடகவியாளர்கள், இந்திய மீனவர்கள் மற்றும் இந்திய மக்கள் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர்களால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
‘இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வழங்கப்படுகின்ற திட்டங்கள் தமிழ் மக்களுக்குரிய முறையில் கிடைப்பதில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுகே அவை சென்றடைவதாக நாங்கள் அறிகின்றோம்.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உதவித் திட்டங்கள் யாவும் எமது வரிப்பணத்தின் மூலமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் முழுமையாக தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம்’ என்று அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உதவித் திட்டங்கள் தமிழ் மக்களைச் சென்றடைவதாகவும் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும்’ சுட்டிக்காட்டினார்.