ஆஸ்திரேலிய அரசால் நன் கொடையாக வழங்கப்பட்ட 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி, வடக்கு கிழக்குடன் தொடுகையாகவுள்ள 4 சிங்கள மாவட்டங்களின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்களப் பிரதேச சபை களுக்கு தலா 50 மில்லியன் ரூபாய்களும், வடக்கு கிழக்கின் 79 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 15 தொடக்கம் 20 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
உலக வங்கியின் நிதியில் வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச மேம்பாட்டுக்காக நெல்சிப் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. மக்கள் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் செயற்றிட்டம் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு டிசெம்பருடன் முடிவடைய வேண்டியிருந்த போதிலும், இந்த ஆண்டு டிசெம்பர் வரையில் குறித்த திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் வடக்கு கிழக்கு பிரதேச மேம்பாட்டுக்காக ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலியன் எயிட் ஊடாக இலங்கைக்கு நன்கொடையாக 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலரை வழங்கவுள்ளது.
இதுவே இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் இறுதி நன் கொடை என்றும் தெரிவிக்கப் படுகின்றது. இந்த நிதி வடக்கு கிழக்கு மற்றும் அதனுடன் இணைப்பிலுள்ள 4 சிங்கள மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இணைப்பு மாவட்டங்களாக உள்ள சிங்கள மாவட்டங் களின் 22 உள்ளூராட்சி சபைகளுக்கும் தலா 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு கிழக்கி லுள்ள 79 உள்ளூராட்சி சபைகளுக் கும் தலா 15 தொடக்கம் 20 மில்லியன் ரூபா நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல்சிப் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கே பெருமளவு நிதி வழங்கப்பட்டிருந்தது. சிங்கள மாவட்டங்களுக்கு வழங்கப்படவில்லை. அதனாலேயே தற்போது சிங்கள மாவட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.