‘ஆவா’ குழுத்தலைவருக்கு விளக்கமறியலில் நீடிப்பு

judgement_court_pinaiயாழ்.மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையும் யாழ்.நீதவான் நீதமன்ற நீதவான் பொ.சிவகுமாரினால் நேற்று நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த குழுவைச்சேர்ந்த ஏனைய இருவரையும் தலா 5 லட்சம் பெறுமதியாக 3 ஆட்பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

யாழ். மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவின் தலைவர் ஆவா வினோதன் உட்பட அக்குழுவைச் சேர்ந்த 13 பேர் ஜனவரி மாதம் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 11 பேர் யாழ் நீதிமன்றத்தினாலும், அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 2 பேர் மல்லாகம் நீதிமன்றத்தினாலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி மேற்படி வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி குழுவிற்கு பிணை வழங்கும்படி அந்தக் குழு சார்பாக மன்றில் ஆஜராகியிலிருந்த சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ், சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன், மற்றும் வி.திருக்குமரன் ஆகியோர் நீதவானிடம் கோரியிருந்தனர்.

இது தொடர்பாக கோப்பாய் பொலிஸார் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் அந்தக்குழுவின் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் நீதவான் பிணையில் விடுவித்ததுடன் ஏனைய 3 பேரும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் பெப்ரவரி 13 (நேற்று) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மூவரில் இருவருக்கு தலா 5 இலட்சம் பெறுமதியான மூன்று ஆட்பிணைகளில் செல்ல நீதவான் அனுமதியளித்ததுடன், குழுவின் தலைவரினை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அச்சுவேலிப் பொலிஸாரினால் ஜனவரி 6 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இருவரும் ஜனவரி 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மேலும் மூவருமாக மொத்தம் ஐந்து பேரும், இறுதியாக கடந்த 10 ஆம் திகதி வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் பஷீர் மொஹமட்டினால் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts