வடமாகாண ஆளுநரும், யாழ். மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக அவசர அவசரமாக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நேற்றுக் காலை கல்வி அமைச்சர் பந்துல குணவர் தன கலந்துகொண்ட பாடசாலைகளின் கட்டடத்திறப்பு விழா நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆளுநர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக நண்பகல் 12.30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தென்படாததால் அங்கிருந்து பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பிற்பகல் 3.30 மணியளவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த இரு நாள்களாக சுகயீனம் காரணமாக ஆளுநரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நிலையிலேயே அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளுநருக்கு இப்போதே முதல்முறையாக மாரடைப்பால் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அவரது உடல்நிலை இன்னமும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.