ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருப்பினும் அரசியல்போராட்டம் இன்னமும் மரிக்கவில்லை -துவாரகா பிரபாகரன்

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் முடிவுக்கு வரவில்லை எனவும், மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் மாண்டுபோன மக்களின் ஈகைகள் அதற்கு வழிகாட்டும் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகா என ‘தமிழ் ஒளி’ இணையப்பக்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி தாம் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும், சிங்கள மக்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டு சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் நாளான நேற்று திங்கட்கிழமை (27) ‘தமிழ் ஒளி’ எனும் இணையத்தளப்பக்கமொன்று இயங்க ஆரம்பித்ததுடன், அதில் நேற்று மாலை 5.20 மணிக்கு மாவீரர்தின நிகழ்வு எனும் பெயரில் நேரடி ஒளிபரப்பொன்று இடம்பெற்றது. அதில் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உரையாற்றுவார் எனக்கூறப்பட்டு, அவரது உரையும் ஒளிபரப்பப்பட்டது. கணினித்தொழில்நுட்பத்தின் ஊடாக வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடி என்பன பின்னணியாக அமைக்கப்பட்டிருந்ததுடன், அதன்முன் தோன்றிய துவாரகா என்று ‘தமிழ் ஒளி’யினால் கூறப்படும் நபர் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் வருமாறு:

அன்புக்குரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். ‘தமிழீழம்’ என்ற அதியுயர் இலட்சியத்துக்காகத் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமது இதயக்கோவில்களில் பூஜிக்கும் இத்திருநாளில் உங்கள்முன் உரையாற்றுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்பளித்திருப்பதைப் பெரும் பேறாகவே கருதுகிறேன். இப்படியொரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையோ ஆபத்துக்கள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே நான் இன்று உங்கள்முன் உரையாற்றுகின்றேன். அதேபோன்று என்றோ ஒருநாள் தமிழீழத் தாயகம் திரும்பி எமது மக்களுடன் ஒன்றாக இருந்து அவர்களுக்கு சேவையாற்றுவதற்கு காலம் எனக்க வாய்ப்பளிக்கும் என்ற அசையாத நம்பிக்கை உண்டு.

ஒன்றுமொத்த உலகமுமே அதியமடையும் வகையில் சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். எதிர்த்துநின்று எம்மோடு போர்புரியத் திராணியற்ற நாடுகளை சிங்கள அரசு தன்பக்கம் வளைத்தது. தோல்வியின் விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நிய சக்திகளிடமும், ஏனைய நாடுகளிடமும் மண்டியிட்டு யாசகம் கேட்டது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீது உலகின் பல நாடுகளால் தடைகள் விதிக்கப்பட்டு, எமது சொத்துக்கள் முடக்கப்பட்டன. தமிழீழத் தாயகத்துக்கான விநியோகப்பாதைகள் மூடப்பட்டன.

எமது தேசவிடுதலை இயக்கம் பலவீனப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்நிய நாடுகள் தலையிட்டு சிங்கள அரசுக்கு உயிர்ப்பூட்டின. உலகில் ஒரு மூலையில் தனித்துநின்று, எமது மக்களின் ஆதரவில் மாத்திரம் தங்கிநின்று போராடிய எமது தேசவிடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப்போவதற்கு இதுவே காரணமாகும். ஆனாலும் அரசியல் சுதந்திரத்துக்கான எமது போராட்டம் முற்றுப்பெறவில்லை.

தமிழீழம் என்ற இலட்சியம் கருக்கொள்ளக் காரணமான புறநிலைச்சூழ்நிலைகள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. தமது தாயகபூமியில் தம்முடைய கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கமுடியாதவாறு சீரழிவுகளை மேற்கொள்வதுடன், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை சிங்கள பௌத்த அரசு முழுமூச்சுடன் முன்னெடுத்துவருகின்றது. இதுபோதாதென்று ஈழத்தமிழ் தாயகம் சிங்களப்படைகளால் முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரமும், அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட தேசமாகத் தமிழீழம் திகழ்கிறது. சட்டவாட்சி மறுக்கப்பட்டு, பயங்கரவாதத்தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என எந்நேரமும் இராணுவத்தின் ஆட்சியை சிங்கள அரசு திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்டவர்களாகவே எமது மக்கள் ஈழத்தில் வாழ்கின்றனர்.

மறுபுறத்தில் போர்நிகழ்ந்த காலத்தில் ஆசைவார்த்தைகூறிய உலகின் சக்திவாய்ந்த நாடுகள், இன்றளவிலும் எமது மக்களுக்கு காத்திரமானதொரு அரசியல் தீர்வை வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்டது போர்க்குற்றமென்றும், மனித உரிமை மீறலென்றும் கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் எந்தவொரு தரப்பினரும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுத்தரவில்லை. இவையே எமது அரசியல் போராட்டம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணங்களாகும்.

1950 களில் சமஷ்டியைக்கோரி எழுச்சியடைந்த எமது போராட்டம் 1960 களில் ஆயுதபலத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. 1970 களில் போர்க்குணமுடைய இளைய தலைமுறை தோற்றம்பெற்றது. சிங்கள ஆயுதப்படைகளையும், அதன் அரச ஒடுக்குமுறை இயந்திரத்தையும் எதிர்த்து வீரம் செறிந்த ஆயுதப்போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத்தலைவரும், எனது தந்தையுமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் இளைஞர்களும், யுவதிகளும் அணிதிரண்டனர். அவர்கள் தமிழீழத்துக்காய் தமது இன்னுயிரைத் தியாகம்செய்த மாவீரர்களே. அவர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றுமே எமது மனக்கோவிலில் வைத்துப் பூஜிப்போம்.

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும், எமது மக்களும், அரசியல் தலைவர்களும், முன்னாள் போராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்துக்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவ்வாறான யதார்த்த சூழமைவில் மக்களென்றும், புலிகளென்றும் ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப்பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும் யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிணாமமாகும். ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். கட்சிபேதங்கள், அமைப்புக்களுக்கு இடையில் நிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காகவும், இனப்படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய கடப்பாடு ஈழத்தமிழ் மக்களுக்கும், புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உண்டு. எமக்கிடையில் கருத்து வேறுபாடுகள் நிலவலாம். ஆனால் அரசியல் தீர்வு என்று வரும்போது நாமனைவரும் ஒரே கோட்டில் பயணிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

அதேவேளை தாயகத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் எமது மக்களினதும், கடந்தகாலங்களில் தமது வாழ்வை அர்ப்பணித்துப்போராடிய முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, வாழ்க்கையை மேம்படுத்தவேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் வளம்பொருந்திய எமது மக்கள் இருக்கின்றனர். ஈழத்தமிழர்கள் அனைவரையும் பொறுப்பேற்று, அவர்களுக்கு உதவி புரிந்தால் அந்நிய தேசத்திடம் கையேந்திநிற்கும் நிலை அவர்களுக்கு ஏற்படாது. இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி பக்கபலமாகத் திகழும் தமிழக உறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத்தமிழ் மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதுமாத்திரமன்றி இந்தியாவிலும், உலகநாடுகளிலும் எம்மோடு துணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையுடன் பற்றிக்கொள்கின்றேன். ஈழத்தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக நீங்கள் தொடர்ந்து குரல்கொடுப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.

எனது அன்பார்ந்த மக்களே, நாம் வரித்துக்கொண்ட இலட்சியமும், அதற்காக மாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் சந்தித்த இழப்புக்களும் அளப்பரியவை. இவை ஒருநாளும் வீண்போகாது. மாற்றங்கண்டுள்ள உலக ஒழுங்குக்கு ஏற்றவாறு அறவழியில் நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லாவிதத்திலும் அரசியல் போராட்டம் மிகவும் கடினமானது. அவ்வகையான போராட்டத்துக்கு பொறுமையும், நம்பிக்கையும், இலட்சிய உறுதியும் இன்றியமையாதவை என்பதை நான் உணர்ந்துகொள்ளாமல் இல்லை.

இந்நேரத்தில் சிங்கள மக்களுக்கு ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாம் என்றுமே சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட்டதுமில்லை. தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டு சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதை நானறிவேன். எமது தேசியத்தலைவர் குறிப்பிட்டதுபோன்று, எமது பாதைகள் மாறலாம். ஆனால் எமது இலட்சியங்கள் ஒருபோதும் மாறப்போவதில்லை. மாவீரர்களின் தியாகங்களும், மாண்டுபோன மக்களின் ஈகங்களும் எமது மக்களுக்கு வழிகாட்டும். நாம் எமது இலட்சியத்தின் பாதையில் சென்று, அதனை ஒருநாள் அடைந்தே தீருவோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

Related Posts