“ஆயுததாரிகளின் மறைவிடம் குறித்து தெரியாது ” -பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

meeting_jaffna_police_jeffreeyஉதயன் பத்திரிகை நிறுவனத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, உதயன் பத்திரிகை நிறுவனத்தின் தாக்குதல் சம்பந்தமான விசாரணைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

”யாழ். உதயன் பத்திரிகை நிறுவனத்தின் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலகரட்ண தலைமையிலான 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தின் போது உதயன் பத்திரிகை நிறுவனத்தின் கடமையாற்றிய ஊழியர்கள் மீதும், அயல் வீட்டுக்காரர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இராசயன பகுப்பாய்வு திணைக்களம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அத்துடன், ஆரம்பகட்ட விசாரணையின் போது, வெற்று ரவைகள் 4, ரவைகள் நோய்ஸ் 1, பிளாஸ்ரிக் கான், பொலித்தீன் பை உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வழக்கு சான்றாக நீதிமன்றத்தில் அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

உதயன் பொலிஸ் கண்காணிப்பில்

உதயன் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணை நிறைவு பெறும் வரைக்கும் உதயனின் இயந்திரப்பகுதி 24 மணி நேரமும் பொலிஸார் கண்காணிப்பிலேயே இருக்கும்.

ஆயுததாரிகளின் மறைவிடம் குறித்து தெரியாது

ஆயுததாரிகளை கண்டுபிடிப்பது பொலிஸாரின் கடமை அல்ல. குற்றங்கள், கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை நாம் கைது செய்து வருகின்றோம். முன்னர் நடந்த தாக்குதல் சம்பவங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கான புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால், ஆயுததாரிகள் எங்கு இருக்கின்றார்கள், யார் என்பது பற்றி பொலிஸாருக்கு தெரியாது. அதனை புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களை கைது செய்வதே எமது கடமை.

நாங்கள் யாழ். மாவட்டத்தில் குற்றங்கள் மற்றும் கொலைகளை கண்டுபிடிப்பதற்கும், தடுப்பதற்கும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். அப்போது நடக்கும் கொள்ளைகள் மற்றும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்கின்றோம்.

அதேவேளை, அந்த விடயங்களை பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்தியும் வருகின்றோம். ஆனால், ஆயுத தாரிகளை இணங்காண்பது என்பது, பொலிஸாரினால் முடியாத காரியம் என்றும், சிவில் நிர்வாகத்தினை கட்டி எழுப்புவதே எமது கடமை என்றும் அவர் மேலும் கூறினார்.

123பேர் கைது

யாழ் மாவட்டத்தில் கடந்த வாரம் பல்வேறு குற்றல் செயல்களுடன் தொடர்புடைய 123பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பொலிஸ் பிரிவில் 82பேரும் காங்கேசன்துறையில் 41பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், வீதிவிபத்து, குடிபோதையில் வாகனம் செலுத்தியமை, பாலியல் துஸ்பிரயோம், கொள்ளை, களவு போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது

14 வயதுடைய சிறுமியர் இருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த இரு நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகள் 19 மற்றும் 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், சங்கானை மற்றும் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

நகைகள், பொருட்கள் திருட்டு

யாழ் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 9 திருட்டுச் சம்பவங்களில் 21 இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் மற்றும் உபகரணங்கள், திருடப்பட்டுள்ளன. யாழ். மற்றும் காங்கேசன்துறை பகுதியில் வீடு உடைத்து திருடியதாக 9 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் 21,36,000 பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாகவும், திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சில திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மீது புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும்’ அவர் மேலும் கூறினார்.

Related Posts