யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை மதவடியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலையில் காக்கைதீவு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவிட்டு அதிகாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை சாவற்காட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளியான எஸ்.நாதன் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்தவராவார்.
பஸ் மோதியதில் இவர் அருகில் உள்ள மதவினுள் தூக்கி எறியப்பட்டார் எனவும், மோதிய பஸ் அந்த இடத்தில் இருந்து தப்பி ஒடியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சிக்கியவர் பொதுமக்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.