அவசரகாலச்சட்டம் நாட்டில் இருந்து நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதற்கு யாழ்ப்பாணத்தில் அண்மை நாள்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் உதாரணங்கள் ஆகும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டால் மாத்திரமே அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் பெறமுடியும்.இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக சட்டவிரிவுரையாளர் கு.குருபரன் தெரிவித்தார்.
மனித உரிமைகள் தினத் தன்று யாழ். திருமறைக்கலா மன்ற கலைத்தூது மண்டபத் தில் இடம்பெற்ற நிகழ்வில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்னும் தலைப்பில் கைதும் தடுத்துவைத்தலும் மற்றும் சித்திரவதை எனும் விடயம் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கைக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவசரகாலச்சட்டம் கடந்தவருடம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நீக்கப்பட்டது. இருப்பினும் சட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில் குறித்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் ஒருவர் தவறு இழைத்திருந்தால் அவருக்கும் இப்போதும் குறித்த சட்ட ஏற்பாடுகளின் கீழ் தண்டனை வழங்க முடியும்.
ஒரு நாட்டில் ஒரே மாதிரியான பல சட்டங்கள் இருக்கின்றன. இவை நிறைவேற்றுத் துறைக்கு இசைவாக இருக்க வேண்டும் என்பதால் அவ்வாறு உள்ளன.
இலங்கையில் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டாலும் அதனை விட மோசமான பயங்கரவா தத் தடைச்சட்டம் இருக்கின்றது. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் பெற வேண்டுமாக இருந்தால் பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும். அவசரகாலச்சட்டம் நீக்கப்படுவதற்கு முதல் நாள் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.
அதன்மூலம் அவசரகாலச் சட்ட விதிகளில் இருந்த சில விடயங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் சேர்க்கப்பட்டன. அவசரகாலச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு வர்த்தமானி 1721/4 வழி செய்கின்றது.
சரணடைந்தவர்களை பாதுகாப்பதற்கும் புனர்வாழ்வு அளிப்பதற்குமான ஏற்பாடுகள் 2005 ஆம் ஆண்டு அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் இருந்ததை 1721/5 வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
இதன் 3 ஆவது பிரிவின் 2 ஆவது உப பிரிவு, குற்றம் இழைத்திருப்பதாக தாங்கள் கருதினால், பயங்கரவாத நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று கருதுபவர்கள் தாங்கள் விரும்பினால் அவர்களாக வந்து ஒப்படைத்துக்கொள்ள முடியும்.
இதன் அடிப்படையிலேயே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம் நோக்கப்பட வேண்டியுள்ளது. இந்த ஏற்பாடுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப முடியும்.
அவசரகாலச் சட்டத்தில் இருந்த பாதுகாப்புக்கூட இந்தப் புதிய ஒழுங்கு விதிகளின் கீழ் இல்லை. அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவரை மாதம் ஒரு முறை நீதிமன்றுக்கு கொண்டு வேண்டும். ஆனால் இதில் அவ்வாறு இல்லை. எனவே அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதால் எந்த நன்மைகளும் இல்லை என்றார்.