அரசியல் கைதிகளை விடுவிக்க எங்கள் சம்மதம் எதற்கு? – சம்பந்தன்

வடக்கு மாகாண சபையை முறையாக இயங்க வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.

sambanthan

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதியிடம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேரடியாக பல தடவைகள் கேட்டுக்கொண்டும் வட மாகாணசபையின் நிர்வாகத்தில் இருக்கின்ற முட்டுக்கட்டைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கூறினார்.

வடக்கில் மக்களால் தெளிவாக அளிக்கப்பட்ட ஜனநாயக ஆணையை அரசாங்கம் நிராகரித்துவருவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, அண்மையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரை சந்தித்துப் பேசியிருந்தார்.

அதன்போது, சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி ஆயர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தப் பிரச்சினை பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடமும் பேசியிருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியதாக ஆயர் கூறியிருந்தார்.

அதுபற்றி கேட்டபோது பதிலளித்த சம்பந்தன், ´அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் விரும்பினால், அதனை அவர்கள் தாராளமாகச் செய்யமுடியும், அதற்கு எங்களின் சம்மதத்தைக் கேட்க வேண்டியதில்லை´ என்றார்.

குற்றச்சாட்டுக்களின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது வழக்கு இல்லாவிட்டால், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

Related Posts