அரசாங்கம் வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளவில்லை- தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

அரசாங்கம் வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்கு ௭வ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.இலங்கையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்காகவே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அனைத்து காய்நகர்த்தல்களையும் முன்னெடுக்கின்றார்.என அவ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வை வழங்க வேண்டும், யுத்தக் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளமையானது புதிய கருத்தல்ல.

இவ்வாறான அழுத்தங்களை வழங்கி 13வது திருத்தத்தை இலங்கையில் அமுல்படுத்துவதே ஐ.நா.வினதும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளினதும் திட்டமாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவை ஆதரித்த ஐ.நா. பின்னர் அதன் அறிக்கை வெளியானதும் யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பான பரிந்துரைகளை நிராகரித்தது. ஏனெனில் உள்ளக விசாரணைகளை ஐ.நா. விரும்பவில்லை.

சர்வதேச விசாரணைகளை நடத்தி இலங்கையை நெருக்கடியில் தள்ளி தனிமைப்படுத்துவதே அவர்களது நோக்கமாகும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐ.நா.வும், இந்தியாவும் சர்வதேசமும் வியூகங்களை வகுத்து சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை வலையில் ௭ம்மை சிக்க வைப்பதற்காக முயற்சிக்கையில் வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் ௭ந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

வீடுகளை அமைத்து அடிப்படை வசதிகளை வழங்கி அம்மக்களை மீள் குடியேற்றவில்லை. பாதைகளை அமைப்பதால் தமிழ் மக்களின் வாழ்க்கையை உயர்த்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts