வடக்கு மாகாணசபை அமைச்சர்களின் நியமனம் தொடர்பான, இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்துள்ளதாக, கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தமாதம், 21ம் நாள் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், வெற்றிபெற்று இரண்டு வாரங்களாகியும், மாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்வதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இழுபறிநிலை இருந்து வருகிறது.
மாகாண அமைச்சர்களாக நான்கு பேரையே நியமிக்க சட்டத்தில் இடமுள்ளதால், மாவட்ட ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் அமைச்சுப் பதவிகளை ஒதுக்குவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
கல்வி அமைச்சர் பதவிக்கு கிளிநொச்சியில் இருந்து தெரிவான குருகுலராஜாவையும், சுகாதார அமைச்சர் பதவிக்கு வவுனியாவில் இருந்து தெரிவான மருத்துவர் சத்தியலிங்கத்தையும், நியமிக்க தமிழரசுக் கட்சி முயற்சிக்கிறது.
ரெலோ,சார்பில் ஒருவருக்கு அளிக்கப்படும், அமைச்சுப் பதவிக்கு மன்னாரில் இருந்து தெரிவான குணசீலன், யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான, சிவாஜிலிங்கம், ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஈபிஆர்எல்எவ், எவரையும் முன்மொழியாவிட்டாலும், அமைச்சு ஒதுக்கீட்டைப் பொறுத்து யாரை நியமிப்பது என்று தீர்மானிக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்தநிலையில், நான்கு அமைச்சுப் பதவிகளை, மாவட்ட மற்றும், கட்சி அடிப்படையில் பங்கிட்டுக் கொள்வதில், முடிவு எடுக்கமுடியாத நிலை தொடர்கிறது.
கொழும்பில் நேற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இது குறித்து ஆராய்ந்த போதிலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் இந்தக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்று இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.
நேற்றைய கூட்டத்தை அடுத்தே, மாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்யும் முடிவு, முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமைச்சர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பதை முதல்வரே தீர்மானிப்பார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.