அனந்தி பங்கேற்ற விழாவில் படை அதிகாரிகள் கலந்துகொள்ள மறுத்தது அநாகரிகமானது

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கேற்ற பொங்கல் விழாவில், அவர் கலந்து கொள்வதாயின் தாங்கள் கலந்து கொள்ள முடியாது என்று படை அதிகாரிகள் மறுத்த சம்பவம் ஒன்று அராலியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அராலிப் பகுதியைச் சேர்ந்த படைஅதிகாரிகள் கலந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்து, அவர்களது பெயர்கள் அழைப்பிதழ்களிலும் இடம்பெற்றிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இது அநாகரிகமானது. அனந்தி சசிதரனை மக்கள் தங்கள் பிரதிநிதியாகத் தெரிவுசெய்திருக்கும் நிலையில், அவரை அவமதிப்பதுபோல இராணுவம் நடந்து கொண்டமை மக்களின் ஆணையை அவமதிக்கும் ஒரு செயலாகும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

Ainkaranesan-pongal-forign-girls1

புதன்கிழமை (15.01.2014) அன்று யாழ் நகரில் நடைபெற்ற பட்டிப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

போருக்குப் பிறகு சாமத்தியச் சடங்கு தொடங்கிச் சாவீடு வரைக்கும் அழையாத விருந்தாளிகளாகப் படையினர் கலந்துகொள்வது இங்கு எழுதப்படாத விதியாக உள்ளது. தாங்கள் தமிழ் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்துவிட்டார்கள் என்று வெளியுலகுக்குக் காட்டும்விதமாகவே அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்.

இதன் அடிப்படையில்தான், யாழ் மாவட்டத்தின் இராணுவத் தளபதியாக இருந்த ஹத்துருசிங்காவும் அண்மையில், படையினர் தமிழ் மக்களுக்கு இரத்தம் வழங்கியதால், தங்களது இரத்தம் தமிழ் மக்களது இரத்தத்துடன் இரண்டறக் கலந்துவிட்டதால், சுத்தமான தமிழர்கள் என்று யாரும் இனிச்சொல்ல முடியாது என்ற பொருள்படப் பேசியிருந்தார். படையினர் வழங்கிய இரத்ததானத்தால் எங்களிற் சிலர் நன்மை பெற்றார்கள் என்பதை நான் நன்றியோடு ஏற்றுக்கொள்கிறேன்.

Ainkaranesan-pongal-forign-girls2

ஆனால், இரத்தத்தை ஏற்றிக்கொண்டதன் மூலம் நாங்கள் அவர்களுடன் இரண்டறக் கலந்துவிட்டோம் என்ற அறிவியலுக்கு ஒத்துவராத அவரது கருத்தை நான் வன்மையாக நிராகரிக்கிறேன். இரத்தத்தில் உள்ள செங்கலங்கள் 120 நாட்கள் வரைதான் உயிர்வாழும் என்பது அடிப்படை விஞ்ஞானஅறிவு.

எமது விளைநிலங்களில் இருந்தும் வாழிடங்களில் இருந்தும் இராணுவம் வெளியேறவேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகிறோம். இராணுவ மேலாதிக்கத்தைத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம், எங்களது பொதுநிகழ்ச்சிகளில் இராணுவத்தினர் அழையாத விருந்தாளிகளாகக் கலந்து கொண்டாலும்கூட அவர்களை நாம் யாரும் அவமதிப்பது இல்லை. தமிழ்ப்பண்பாடு கருதி வரவேற்கவே செய்கிறோம்.

இந்தப் பட்டிப்பொங்கல் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்க வந்தவர்கள் யாழ்ப்பாண மாநகர முதல்வரும் இந்நிகழ்ச்சிக்கு வருவார், நீங்கள் வருவீர்களா என்று கேட்டார்கள். ஆனால் இங்கு முதல்வர் வரவில்லை. நான் மறவன்புலவில் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் தென்மராட்சி தெற்கு கட்டளைத் தளபதியும் கலந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவரை அழைக்கவில்லை. அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் சென்று தான் கட்டாயம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டு வேட்டி சால்வையுடன் ஆசாரசீலராக வந்திருந்தார். யார் வருகிறார்கள் என்பது எனக்குப் பிரச்சினையில்லை. நிகழ்ச்சியின் மையக்கருத்தியல் ஏற்புடையதாக இருந்தால் அதில் நான் கலந்துகொள்வேன்.

பட்டிப்பொங்கல் விழாவும் எமது தமிழ்ப் பண்பாடு சார்ந்தும் விவசாயம் சார்ந்தும் இயற்கைச் சூழல் சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்த பசுக்களுக்கும் காளைகளுக்கும் எடுக்கப்படும் விழா என்பதால் இதில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இன மத வேறுபாடின்றி நடைபெற்ற கோமாதா பவனி

அனந்தி தலமையில் விழா!, விழாவைப்புறக்கணித்த இராணுவ,பொலிஸ் அதிகாரிகள்!

Related Posts