அனந்தி சசிதரனது பாதுகாப்பு திடீரென இரத்து!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனது காவல்துறை பாதுகாப்பு நேற்றிரவுடன் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரால் செய்யப் பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து கடந்த மாதம் 16 ம் திகதி முதல் பெண் காவல்துறையை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

mulli-sivji-3

இந்நிலையில் சுமார் ஒரு மாத காலமேயான நிலையில் அவருக்கு வழங்கப் பட்ட காவல்துறை பாதுகாப்பு நேற்றிரவோடிரவாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவில்லையென தெரிவித்தே காவல்துறை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தன்னுடன் இணைந்ததாகக் காவல்துறை பாதுகாப்பினை பெற்றுக் கொண்ட சக மாகாணசபை உறுப்பினர்களான கஜதீபன் மற்றும் சுகிர்தன் ஆகிய இருவரதும் காவல்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படவில்லையென அனந்தி ஊடகவியலாளர்களிடையே பேசுகையில் தெரிவித்தார்.

தனக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்கின்ற நிலையில் பாதுகாப்பு விலக்கப்பட்டமைக்கும் அண்மையில் கட்சி அலுவலகத்தினை உத்தியோக பூர்வமாக திறந்து அரசியல் பணிகளில் முழு அளவில் குதித்திருக்கின்ற சூழலிற்கும் தொடர்புகள் இருக்கலாமென தான் சந்தேகிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் தனக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டமை தொடர்பில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் முதலமைச்சர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts