சம்பள முரண்பாட்டுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதன் காரணமாக அடுத்த மாதம் 7ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 5 நாட்கள் தொடர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடந்த இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தங்களது போராட்டம் தொடர்பாக அரசாங்கத்தினால் எந்தவித சாதகமான பதிலும் இதுவரையில் தங்களுக்கு வழங்கப்படவில்லை என சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
இதனாலேயே அடுத்த கட்ட போராட்டத்துக்கு ஆயத்தமாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.