வட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம்!!

மோட்டார் சைக்கிளில் சேலை சிக்குண்டுதால் மனைவி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அவரை ஏற்றிச் சென்ற கணவரை நடுவீதியில் வைத்து வட்டுக்கோட்டை காவற்துறையினர் தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் இடம்பெற்றது. வட்டுக்கோட்டையிலிருந்து மனைவியை ஏற்றிக்கொண்டு இளம் குடும்பத்தலைவர் சித்தன்கேணிக்கு பயணித்துள்ளார். சங்கரத்தைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்குண்டு மனைவி விபத்துக்குள்ளாகியுள்ளார். தலையில் படுகாயமடைந்த மனைவியை அம்புலன்ஸ் வண்டியில் தெல்லிப்பளை அனுப்பிவைத்த குடும்பத்தலைவர் தானும் வைத்தியசாலைக்குச் செல்ல முற்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்த தமிழ் காவற்துறை உத்தியோகத்தர் உள்பட காவற்துறை உத்தியோகத்தர் இருவர் விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் விபத்துக்குள்ளான குடும்பத்தலைவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை காவல் நிலையம் எடுத்துச் செல்லத் தருமாறு கேட்டுள்ளனர்.

தான் மனைவியைப் பார்க்க வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்பதால், சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். எனினும் காவற்துறையினர் அதற்கு மறுத்தததுடன், குடும்பத்தலைவருக்கு கைவிலங்கிட்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

காவற்துறையினரின் இந்தச் செயலைக் கண்டவர்கள், குடும்பத்தலைவரைத் தாக்கவேண்டாம் என்று கேட்டதுடன், அவரிடமிருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கிப் காவற்துறையினரிடம் வழங்கியுள்ளனர். குடும்பத்தலைவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் மோட்டார் சைக்கிளையும் காவல் நிலையத்துக்கு காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் எடுத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் இடம்பெற்றது. வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரால் வீடு கொடுத்து தங்க வைக்கப்பட்டுள்ள சிங்கள காவற்துறை உத்தியோகத்தரே இந்த அடாவடியில் ஈடுபட்டார் என்று அங்கு நின்றவர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவற்துறை உத்தியோகத்தர்கள் சிலர் கையூட்டுப் பெற்றுக்கொள்வதாகவும் மறுப்பவர்களை வயல் வெளிக்கு அழைத்துச் சென்று அச்சுறுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts