போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கப்பட்ட நிதியை மோசடி செய்தவர் தலைமறைவு

வடக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கு உதவுவதாகத் தெரிவித்து பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்திடம் பல கோடி ரூபா நிதியை மோசடி செய்த முக்கியஸ்தர் ஒருவர் உள்பட இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் இருவரும் இலங்கையில் தலைமறைவாகி உள்ளதாக அவர்களிடம் உதவித் திட்ட நிதியை வழங்கிய நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கை மற்றும் பிரிட்டனில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நிறுவனத்தில் திருகோணமலையை சேர்ந்த ராஜ்சங்கர் பாலசிங்கம் (வயது 45) என்ற நபர் முகாமைத்துவத்தின் நம்பிக்கையைப் பெற்றவராகச் செயற்பட்டு வந்தார்.
அந்த நிறுவனத்தில் ஒரு சிற்றூழியராக இணைந்த ராஜ்சங்கர் தான் இலங்கை மக்களுக்கு சேவை செய்ய துடிப்பவன் போல நிறுவனத்தின் முகாமைத்துவத்திடம் நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டு இலங்கையில் அந்த நிறுவனத்தால் நடாத்தப்படும் பல மனிதநேய பணிகளை தானே முன்னின்று நடாத்தும் பொறுப்புக்களை எடுத்துள்ளார் .

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வசதி வாய்ப்புக் குறைந்த மக்களுக்கு வீடுகளை இலவசமாக அமைத்துக்கொடுத்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவேண்டும் என்ற அந்த நிறுவனத்தின் இலாப நோக்கற்ற தொண்டு பிரிவு முடிவு எடுத்தது. அதனைப் பயன்படுத்தி ராஜ்சங்கர் பொறுப்பை தானே பெற்றுக்கொண்டார்.

போரால் பாதிக்கப்பட்டு மீள்குடியமர்ந்த மக்களுக்கான வீடமைப்பு செயல் திட்டங்களை வன்னியில் தொடங்கிய இவர், தெரிவு செய்த பயனாளிகளுக்கு வழங்குவதற்கான காணிகள் மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதிகளாகும்.

காடழிப்பு செய்ததுடன் பெறுமதி மிக்க காட்டு மரங்களைவெட்டி விற்றதும் கிடைத்த இடங்களில் எல்லாம் மணல் கொள்ளையிலும் இவர் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த தகவல்களை ஆதாரபூர்வமாக அறிந்து அதிர்ச்சியடைந்த நிறுவனம், ராஜ்சங்கரை பணி இடைநீக்கம் செய்து உடனடியாக விசாரணைக்கு அழைத்தது.

மோசடியாளருக்கு எதிராக பிரிட்டன் மற்றும் இலங்கை பொலிஸில் அந்த நிறுவனம் முறைப்பாடுகளை செய்தது.
ஆனாலும் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என காரணம் காட்டி தற்போது என்னால் பிரிட்டன் வரமுடியாது என்று கூறிக்கொண்டு குடும்பத்துடன் இலங்கையில் தலைமறைவாகியுள்ளார் ராஜ்சங்கர்.

ராஜ்சங்கரின் மீது கொண்ட நம்பிக்கையில் சந்தேகம் கொண்டு தொண்டு நிறுவனம், முன்னர் மேற்கொண்ட பணிகள் தொடர்பான ஆவணங்களை துருவி ஆராய மேலும் அதிர்ச்சிகள் காத்திருந்தன எந்த விதமான பணிகளும் நடைபெறாமலேயே பல கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டமையை சான்று ஆவணங்களை சமர்ப்பித்து ராஜ்சங்கரும் அவரது சகாவான ஜெயராசாவும் இணைந்து ஆயிரக்கணக்கான பவுண்ஸ்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தியுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது .

ராஜ்சங்கர் தன்னிடமுள்ள பணத்தை புத்திசாலித்தனமாக பல பினாமி பெயர்களில் முதலீடு செய்துள்ளார். அவர் இலங்கையிலும் பிரிட்டனிலும் பல சொகுசு மாடி குடியிருப்புகளை சொந்தமாக வாங்கியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related Posts