வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து நல்லூர் ஆலய சூழலில் யாசகம் பெற்ற 9 பேருக்கு தலா 20 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட உடமைகளை மீள வழங்குமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது.
நல்லூர் ஆலய சூழலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்த 9 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள்.
யாசகர்கள் 9 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (ஓகஸ்ட் 26) திங்கட்கிழமை முற்படுத்தப்பட்டனர். அவர்களின் உடமையில் இருந்த பணம், பாத்திரங்கள் மற்றும் ஆடைகளை சான்றுப்பொருள்களாக பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.
9 பேருக்கும் எதிராக யாசகம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.
“9 பேரும் யாசகம் பெற்ற போதே கைது செய்யப்பட்டனர். ஒவ்வொருவரும் பதுளை, ஹட்டன் என மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஆலயத்தில் கூடும் அடியவர்களிடம் திருட்டில் ஈடுபடவே வந்துள்ளனர் என்று சந்தேகம் உள்ளது” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.
9 பேரும் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.
9 பேரையும் கடுமையாக எச்சரித்த நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல், ஒவ்வொரும் 20 ரூபாவை தண்டமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டார். அத்துடன், அவர்களது உடமையிலிருந்து மீட்கப்பட்ட பணம் உள்ளிட்டவைகளை மீள வழங்குமாறும் நீதிவான் அறிவுறுத்தினார்.