கைதானவர்கள் குறித்து இதுவரை 20 முறைப்பாடுகள்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு

யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து உறவினர்களால் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கள் வரை 20 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த மாதம் 30 ஆம் திகதியிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களும், முன்னாள் போராளிகளும் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வவுனியா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இதுவரை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 45 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களில் 8 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப் பட்டவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வரையில் மேலதிக மாக 3 முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றுள்ளன. பதிவு செய்யப்பட்ட 20 முறைப்பாடுகளில் பல் கலைக்கழக மாணவன் கைது தொடர்பில் ஒரேயொரு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு களில் 3 கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts