நல்லூர் ஆலய வளாகத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவம் அங்கு தொடர்ந்தும் இருப்பதால், பக்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘யாழ்ப்பாணம் நல்லூர் என்பது தமிழர்களுடைய கலாச்சார அடையாளம். யாழ்ப்பாணம் நல்லூர் என்பது அவர்களுடை ஆத்மாவோடு ஒன்றினைந்த ஒரு இடம்.
யாழ்ப்பாணம் நல்லூரிற்குள்ளே திட்டமிட்ட வகையில் ஒரு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் இராணுவத்தினர் செயற்படுகின்றார்கள் என்பதையும் உடனடியாக இதனை நிறுத்த வேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.