ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக குறித்த கட்சிகளின் விஞ்ஞாபனத்தின் அடிப்டையிலேயே ஆதரவு தெரிவிப்போம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிறற்றுக்கிழமை) இடம்பெற்ற தலைமைக் குழுவின் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலை நாம் மேற்கொண்டோம்.
எனவே இந்த நாட்டில் ஏழு ஜனாதிபதித் தேர்தல் கடந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.
எது எவ்வாறு இருந்தாலும் ஈழத்தமிழ் மக்கள் தங்களிற்கு ஏதாவது கிடைக்குமா என்ற நிலையில் இத்தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணப்பாடு இருக்கின்றது. எனவே இது தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இம்மாத இறுதிக்குள் மத்தியகுழு மற்றும் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்க இருக்கின்றோம்.
பிரதான கட்சிகள் இரண்டுதான் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறன. இந்த சூழ்நிலையில் அவர்களுடைய தேர்தல் அறிக்கையின் பின்னரே எமது தீர்மானத்தை தெரிவிக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.