தமிழ் மக்கள் கோட்டாபாயவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். வாக்களிக்க கூடாது. சுயமாக சிந்திக்கும் தமிழர்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள். நான் சுதந்திரக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக விசயம் தெரியாத சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன்.
விக்னேஸ்வரன் சுதந்திரக்கட்சியில் போட்டியிட போகிறார் என சிலரால் பரப்பப்பட்டு வந்த வதந்தி குறித்து தெளிவுபடுத்தியபோதே இதனை தெரிவித்தார்.
“சுதந்திரக்கட்சியில் போட்டியிட என்னிடம் யாரும்ம் கேட்கவில்லை. சில காலத்தின் முன்னர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார். விக்னேஸ்வரன் விரும்பினால் சுதந்திரக்கட்சியில் போட்டியிடலாம என. அதை வைத்து யாரோ கிளப்பிய வதந்தி இது. நான் அப்படி சொல்லவில்லை.
தேர்தலில் யாராவது ஒரு சிங்களவர்தான் வெல்லப்போகிறார். தமிழர் ஒருவர் போட்டியிடுவதால் எந்த பலனுமில்லை. ஆனால் மூன்றாவது நபருக்கு வாக்களிப்பதால் தமிழர்களின் மனநிலையை உலகிற்கு புரிய வைக்கலாம்.
தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக எழுத்து மூலமோ அல்லது வேறு ஏதேனும் வழியில் உத்தரவாதமளிக்கும் தரப்பிற்கு தமிழர்கள் வாக்களிக்கும் முடிவிற்கும் வரலாம்.
கோட்டாபய ராஜபக்சவிற்கு சுயமாக சிந்திக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். வாக்களிக்க கூடாது. கடைசிக்கட்ட யுத்தத்தில் நிராயுதபாணியாக சரணடைய சென்றவர்களை கொல்ல உத்தரவிட்டவர் அவராகத்தான் இருக்க வேண்டும். வெள்ளைவான் கடத்தல்கள் உள்ளிட்ட பல கொடுமைகளை அவர் செய்தார்.
கோட்டாபயவை வேட்பாளராக்கும் மஹிந்தராஜபக்சவின் முடிவு தவறானது என்றார்.