நல்லூர் ஆலயத் திருவிழா காலத்தில் தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கலாசார உடைகளை பக்தர்கள் அனைவரும் அணிந்து வரவேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் எஸ்.நிஷாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கோயிலின் பெரும் திருவிழா உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் தமிழர்களின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களை வழமை போன்று பாதுகாத்து எம் அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தவேண்டிய தார்மீகப் பொறுப்பும் கடமையும் தமிழர்களாகிய எமக்கே உண்டு.
எனவே, திருவிழா உற்சவ நாட்களில் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் எமது தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை மட்டுமே அணிந்துவர வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்துகின்றது.
மேலும், புலம்பெயர் தேசங்களில் இருந்து நல்லூர் கந்தனைத் தரிசிக்க குடும்பத்தோடு வரும் பக்த அடியார்கள், நல்லூர் ஆலய சுற்றாடலுக்கு வரும்போது தமிழ் கலாசார உடைளை அணிந்து வரவேண்டும் என்றும் பேரவை வலியுறுத்துகின்றது.
அத்துடன், நல்லூர் ஆலய சுற்றாடலுக்குள் பக்தர்களுக்கு இடையூறாகவும் அநாகரீகமாகவும் மதுபோதை மற்றும் துர்நடத்தை போன்ற செயற்பாடுகளில் யாரும் ஈடுபட முடியாது என்றும், இவ்வாறானவர்களைக் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினர் தயாராக உள்ளார்கள் என்றும் மேற்படி ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.