வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார், ஆனால் நாம் அதனை நிராகரித்தோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவில் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனது மகனுக்கு பெற்றுக் கொடுக்க சாந்தி சிறிஸ்கந்தராஜா 2016 ஆம் ஆண்டு கோரினார்.
அரசாங்க அதிபர் பணிமனையில் அனுமதிக்கப்பட்டு பட்டியலும் வந்தது. அதனை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் நிராகரித்து, அதை நீண்டகால குத்தகையில் வழங்க முடியாது என்பதை தெளிவாக உறுதியாக கூறினோம்.
அந்த காணி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணி. எனவே அவர் ஓரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றவர். பொது மக்களுக்கு காணி இல்லை என நாம் சண்டை பிடித்துக்கொண்டு இருக்கும் போது அதை நீண்டகால குத்தகைக்கு எடுப்பதற்கு முயற்சித்தமை தவறு.
அதிலும் அவரது மகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நிலையில் 18 வயதில் இருக்கும்போதே பெரிய தொழிலை செய்வதற்காக என்று காரணம் காட்டி எடுக்க முயன்றது ஓரு தவறான உதாரணம் என்பது வெளிப்படையானது.
இந்த விடயம் தமிழரசுக் கட்சியின் கவனத்திற்கும் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பான பல குற்றச்சாட்டுக்களை மக்கள் முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக கட்சி விசாரணையை முன்னெடுக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.