வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளையதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் காவற்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆராய்ந்தனர்.
அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு வசதியாக யாழ்ப்பாணம் மாநகர சபையால் 3 லட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட போதும் மேலதிகமாக 4 கூடுகள் தேவை என காவற்துறையினரால் கோரப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 25 நாள்கள் இடம்பெறும் இந்தத் திருவிழாக்களில் இம்முறையும் பல லட்சம் அடியவர்கள் நல்லூரில் திரள்வர். வழமை போன்று வீதி மறியல்கள் போடப்பட்ட போதும் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன. இதற்காக யாழ்ப்பாணம் மாநகர சபையால் 3 லட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
இந்த நிலையில் எந்தந்த இடங்களில் சோதனைக் கூடங்களை அமைத்து அடியவர்களை சோதனை செய்வது தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் காவற்துறை அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் தலைமையகப் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆராய்ந்தனர். அவர்களுடன் மாநகர சபை பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது தமக்கு மேலதிகமாக சோதனைக் கூடங்கள் தேவைப்பட்டால், அவற்றைச் செய்துதருமாறு பொலிஸாரால் கோரப்பட்டது. குறிப்பாக 12 சோதனைக் கூடங்கள் அவசியம் என்றும் இதன்போது காவற்துறை அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.