தமிழ் பேசும் மக்களின் வாழ்வைக் கட்டியயழுப்ப இலங்கை அரசின் விசேட நிதி ஒதுக்கீடு தேவை; மாவை. சேனாதிராசா வலியுறுத்து

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையைக் கட்டி யெழுப்புவதற்கு அரசு விசேட நிதி ஒதுக்கீடுகளைச் செய்வது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

வடக்கு, கிழக்கு மக்களின் கஷ்டங்களை, அவலங்களை கருத்தில் கொள்ளாமல் 2013 வரவு செலவுத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ள தாகவும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்றுக் குற்றம் சாட்டினார்.

நிதி, திட்டமிடல் அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும்கூட வடக்கு கிழக்கில் வறுமை மாறவில்லை. அது மேலும் அதிகரித்துள்ளது. வடக்கு மக்களின் கஷ்டங்கள் அவலங்கள் கருத்தில் கொள்ளப்படாமலேயே இலங்கையின் பொருளாதார மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தங்களுடைய நிலத்தில் தொழிலை மேற்கொண்டு அதனூடாகக் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தக் கூடிய நிலைமை வடக்கு கிழக்கில் இன்னும் ஏற்படவில்லை.

எங்கள் பிரதேசத்தில் மூன்றிலொரு பகுதியில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் இருப்பு குறைக்கப்பட வேண்டும். அத்துடன், இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலங்களிலிருந்து அது வெளியேற வேண்டும்.

நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதால் இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் இரண்டு இலட்சம் பேர் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டிலும் இன்று ஒரு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே உள்ளனர்.
குடிமகன் ஒருவன் ஆரம்பத்தில் வாழ்ந்த நிலத்திலேயே மீளக்குடியமர்த்தப்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

நாம் இராணுவத்தை அகற்றச் சொல்லவில்லை. அதன் இருப்பைக் குறைக்குமாறும் ஆக்கிரமித்துள்ள நிலத்திலிருந்து வெளியேறுமாறுமே திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 இலட்சத்து 18 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இதில் 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசு கட்டிக்கொடுக்கிறது. உலக நாடுகள் சிலவும், அரச சார்பற்ற நிறுவனங்களும் சில நூறு வீடுகளைக் கட்டுகின்றன.
இது போதாது.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகள் தேவை. மீள்குடியேற்ற அமைச்சுக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் 0.03 வீதம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு போதுமான நிதியா?

இராணுவத்துக்கு வீடுகள் அமைப்பதற்கு 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெற்றோருக்கும் விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இதை நாம் ஆட்சேபிக்கவில்லை. அதேபோன்று வடக்குகிழக்கு மக்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்துமாறு கோருகின்றோம் என்றார்.

Related Posts