யுத்தம் நிறைவடைந்த பின் அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று!- ஐ.நா குழுவிடம் யாழ். ஆயர் எடுத்துரைப்பு

யுத்தம் நிறைவுபெற்றிருந்த நிலையில், நாட்டில் ஜனநாயகமும், நல்லிணக்கமும் ஏற்படும் என தமிழர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அத்தனையும் பொய்யாக்கப்பட்டுள்ளதாக ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிடம் யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தெரியப்படுத்தியுள்ளனர்.

நியூயோர்க்கிலுள்ள ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இன்று காலை யாழ்.ஆயர் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதில் ஜப்பான், தென்னாபிரிக்கா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்கு மேலும் குறிப்பிடப்பட்டதாவது. நாட்டில் சகலரும் சமமானவர்களாக கணிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை கிடையாது. ஏற்றத்தாழ்வுகளும் வேற்றுமைகளும் அதிகரித்திருக்கின்றன.

மேலும் தற்போது தமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்களின் மூலம் அரசாங்கம் ஏதோவொன்றை மறைத்து வைத்துக்கொண்டு செயற்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
மக்களுடைய மனங்களை வெல்லாமல், யுத்த வெற்றியின் களிப்பில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஆபத்தானவை ஒவ்வொருவரும் தங்களது தனித்துவங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஏது நிலைகள் வேண்டும். ஆனால் அது இல்லை.

அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது. இராணுவத்தினரின் அதிகளவு பிரசன்னத்தை தமிழர் தாயகப் பிரதேசங்களில் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பில் ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பில் ஜனாதிபதியுடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் பேசியிருக்கின்றோம். தற்போது எமது விஜயத்தின் முக்கிய நோக்கம் தமிழர்களுடைய மனோநிலையை அறிவதே.

எனவே இது குறித்து நாம் அக்கறையுடனிருக்கின்றோம் என குறிப்பிட்டனர். மேலும் இந்த குழுவினர் இன்று காலை யாழ்.அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர் ஆகியோரை யாழ்.நகரில் சந்தித்து பேசினர்.

இதேவேளை, தமிழர்களின் பகுதியில் மேற்கொள்ளப்படும் அரசினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் கேள்விகேட்ட தென்னாபிரிக்க பிரதிநிதி, தழிழர்கள் அவர்களது சொந்தக் காணியில் குடியிருக்க அனுமதிக்காமை குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சந்திப்பில் இலங்கையின் ஜ.நா பிரதிநிதி, பாலிதகோஹன்ன உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Posts