இலங்கை பொலிஸ் சேவைக்கான பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இலங்கை பொலிஸ் சேவைக்கான ஆண், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் நாளை பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இதற்கமைய பொலிஸ் பதவிக்கான விண்ணப்பங்கள், நாளை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்வைத்து ஏற்றுக்கொள்ளப்படும் என, யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் அதற்கு மேலதிக தகமைகள் உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் இச்சந்தர்ப்பம் அரியதோர் சந்தர்ப்பம் எனத் தெரிவித்துள்ள யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எம்.டி.ராஜித்த ஸ்ரீ தமிந்த, இதன்மூலம் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து நல்லதோர் சேவையைச் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த விண்ணப்பங்கள் மூலம் தெரிவுசெய்யப்படும் பயிலுனர்களுக்கு அனைத்து பயிற்சிகளும் வட மாகாணத்திலேயே வழங்கப்படுவதோடு மேலான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விண்ணப்பதாரிகள் திறமைகளுக்கமைய கடமையில் அமர்த்தப்படுவதுடன், உயர் கல்விக்கான வாய்ப்பு, வெளிநாடு மற்றும் இலங்கையில் கணினிப் பயிற்சி, வாகனப் போக்குவரத்து பயிற்சி, பொலிஸ் குதிரைப்பயிற்சி உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளும் வழஙக்கப்படும் எனவும் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.