நிரபராதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். பல்கலை மாணவர்களினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டன. அத்துடன் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலையில் திலீபனின் ஒளிப்படம் ஒட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், அவர்களை வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மாணவர்கள் நேற்று முதல் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.