இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்காக வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.
எந்தவிதமான சுய அரசியல் நோக்கங்களும் இன்றி இந்த நிகழ்வினை இந்தக் குழு ஏற்பாடு செய்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. அதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் அவர்களுக்கான நீதிக்காக குரல் கொடுப்பதற்குமாக முள்ளிவாய்க்காலில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஒன்று கூடுவதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
தமது உறவுகளை இழந்த மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர்விட்டு அழுது தீபம் ஏற்றி அஞ்சலி செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் இருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சர்வதேச சமூகத்தின் கவனம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இருந்து திசை திரும்பியிருக்கின்ற நிலையிலும், அரசாங்கம் தற்போதைய சூழ்நிலைகளை எமக்கு எதிராகப் பல்வேறு வழிகளிலும் பயன்படுத்திவருகின்ற நிலையிலும், எமது உரிமைகள் குறித்தும் எமக்கு கிடைக்கவேண்டிய நீதி குறித்தும் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டவேண்டிய அவசியம் இன்று எமக்கு இருக்கின்றது.
ஆகவே இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வினை மிகவும் அமைதியான முறையிலும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று நாம் அஞ்சலி செலுத்தி நடத்துவது அவசியமாகியுள்ளது. அத்துடன் சர்வதேச சமூகத்துக்கு எமது செய்தியினைக் கூறுவதும் இந்தச் சமயத்தில் அவசியமாகியுள்ளது.
கடந்த காலங்களைப் போல மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரிமைகள் மற்றும் நீதி ஆகியவை குறித்து தமது உறுதியான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. அன்றைய தினம் நானும் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.