நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பாடசாலை நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு திரும்பி வருகிறது.
அந்தவகையில் இரண்டாம் தவணைக்கான ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறை தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், பின்னர் தாக்குதல் அச்சுறுத்தல் நீக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினமும் பாடசாலை மாணவர்களின் வருகையில் பாரிய வீழ்ச்சியையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
தலைநகர் கொழும்பில் பாடசாலைகளின் பிரதான நுழைவாயிலில் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மாணவர்கள் பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
வடக்கில் யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர், பெற்றோர் ஆகியோர் ஒன்றிணைந்து பாடசாலை நுழைவாயில்களில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடும் சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு பிரிவினர், பெற்றோர், பாடசாலை சமூகத்தினர் ஆகியோரின் விசேட சோதனைகளுக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வவுனியாவிலும் பொலிஸாருடன் இணைந்து ஆசிரியர்களும், பெற்றோரும் பாடசாலை வளாகங்களில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பொலனறுவையிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகை உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், மாணவர்களின் வருகை கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்தில் கண்டி மாவட்டத்திலும் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், அதிகளவான பாடசாலைகளில் பத்திற்கும் குறைந்த மாணவர்களின் வருகையே பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகளவான பாடசாலைகளின் நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.