வவுனியா – பெரிமடு பகுதியில் வைத்து சிறுவன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து குறித்த சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று மலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா – நெடுங்கேணி – பெரியமடு பகுதியில் வைத்து கடந்த 6 ஆம் திகதி 8 வயதுடைய திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவன் கடத்தப்பட்டார்.
கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் கனகராயன்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
சிறுவனின் தந்தையை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்த முகவர் கதைப்பதாகவும், 35 லட்சம் ரூபாய் தந்தால் சிறுவனை மீள ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று காலையில் சிறுவனை அப்பகுதியிலுள்ள பாலடைந்த வீடு ஒன்றிலிருந்து மீட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல் துறையினரின் விசாரணைகளுக்கு அமைய சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் அவரின் சிறிய தந்தை ஆகியோர் தொடர்பு பட்டிருக்கலாம் என காவல் துறை சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு, தாயாரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.