வடக்கில் சிங்கள சிற்றூழியர்கள் நியமனம் தொடர்கிறது. நான்கு மாவட்ட செயலகங்களில் 7 சிங்களவர்கள் சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 26 அரசியல் குழப்பத்தின் பின்னனர், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்தது. இதன்போது அலரி மாளிகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்கள்- ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்புக்கள் நடைபெற்றன. இதன்போது, வடக்கில் சிங்கள ஊழியர்கள் நியமிக்கப்பட கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டிருந்தது.
அதற்கு பிரதமர் நன்றாக தலையசைத்து சம்மதம் தெரிவித்திருந்தார். எனினும், அது தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது.
கடந்த 25ம் திகதியும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிற்கு 7 சிங்கள சாரதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆட்சிபீடமேற்ற பலத்த முயற்சிகள் மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, முக்கிய நிபந்தனைகளாக- சுதந்திர தினத்தின் முன்னர் அரசியலமைப்பு நிபுணர்குழு வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டிருந்தது. அது சம்பிரதாயமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அரசியலமைப்பு முயற்சிகள் இந்த அரசின் காலத்தில் ஒரு சாணும் நகராதென்ற நிலைமையில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.