பாகிஸ்தான் வான் பரப்பில் பறந்த இந்திய விமானப்படை விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனெரல் ஆசிஃப் கஃப்ரூர் அறிவித்துள்ளார்.
ஒரு விமானம் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீருக்குள்ளும் இன்னொரு விமானம் இந்திய ஆளுகைக்கு உள்பட்ட காஷ்மீரிலும் விழுந்ததாக கூறியுள்ள அவர், ஒரு இந்திய விமானியை தாங்கள் கைது செய்துள்ளதாக கூறியுள்ளார்.
பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய வான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருக்கும் பாகிஸ்தான் வான் வெளியில் இருந்து இந்திய நிலைகளை நோக்கி தங்கள் விமானப் படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறியுள்ளார்.
இது இந்தியா தங்கள் எல்லைக்குள் நுழைந்ததற்கான பதிலடி அல்ல என்று கூறியுள்ள அவர், மனித உயிரிழப்புகள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படாத வகையில் ராணுவ அமைப்புகள் அல்லது இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் தீவிரவாதிகளின் கூடாரங்கள் என்று அவர்கள் கூறும் இடங்களைத் தாக்கினால், இந்திய ஆதரவுடன் பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்கள் மீது பதிலுக்குத் தாக்குதல் நடத்த எங்களுக்கும் உரிமை உண்டு என ஃபைசல் தெரிவித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் பகுதியில் இருக்கும் இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் ஜெட் போர் விமானங்கள் நுழைந்ததாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த அந்த விமானங்கள், இந்திய வான் பரப்பில் கண்காணிப்புப் பணியில் இருந்த ஜெட் விமானங்களால் திருப்பி அனுப்பப்பட்டன என்று அவர் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மூன்று மணிநேரம் மூடப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.