யாழ்.மாவட்டத்தில் தற்போதும் இயங்கி வரும் நலன்புரி நிலையங்களை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றிகிழமை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
‘யாழ்.மாவட்டத்தில் உள்ள இன்னமும் விடுவிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் வசித்து வருகின்றனர். அந்த நலன்புரி நிலையங்களை திருத்துவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதினால் யாழ்.மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களை திருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது’ என்றார்.
இதேவேளை, இந்திய வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் 10 பிரதேச செயலர் பிரிவுகளில் வீட்டுத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகவும் இதன்போது பயனாளிகள் தெரிவுப் பட்டியலை கிராம சேவையாளர் அலுவலகம், பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்;றும் அவர் அறிவுறுத்தினார்.
இதில் ஏதாவது தவறுகள் ஏற்படுமாயின் அவை கவனத்தில் எடக்கப்பட்டு அதற்கு பதிலீடாக வேறு பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
படைத்தரப்பினர் வசமுள்ள அரச, தனியார் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இராணுவத்தால் கோரப்பட்டுள்ள காணி தொடர்பாக பிரதேச செயலர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன், மீள்குடியேற்றத்திற்காக மீளளிக்கப்படாதுள்ள பகுதிகளை படிப்படியாக விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.