க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 2 லட்சம் பேருக்கு டெப்!

க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 2 லட்சம் பேருக்கு டெப் கணினி வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை இன்று அனுமதியளித்தது.

மாணவர்களுக்கு டெப் கணினிகள் வழங்கப்பட்டு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் சென்றால், அது அரசு மீது பூமாரங்காக திருப்பியடிக்கும் எனச் சுட்டிக்காட்டி அந்த திட்டத்துக்கு ஜனாதிபதி கடந்த ஜூலை 27ஆம் திகதி தடைவிதித்தார்.

அதனால் கடந்த 8 மாதங்களாக இந்த திட்டத்துக்கான அனுமதியை வழங்குவதில் அமைச்சரவைக்குள் இழுபறிநிலை நீடித்தது.

ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்களுக்கும் 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் டெப் கணினிகளை வழங்கும் திட்டத்தை 2017ஆம் ஆண்டு கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் டெப் கணினியை 27 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு வழங்கல் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த பெப்ரவரி நடந்த அமைச்சரவையில் இந்தத் திட்டத்தை இடைநிறுத்திவைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கினார்.

இந்த திட்டத்திலுள்ள தொழிநுட்ப அம்சங்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் 2018ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைத்தார்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை முன்வைக்க டெப் கணினி வழங்கும் திட்டம் மீளவும் அமைச்சரவையால் கிடப்பில் போடப்பட்டது. அதற்கு இன்று 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமைச்சரவை வழங்கியது.

Related Posts